கடலூர் : 2½ மாதத்துக்கு பிறகு ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடும் முறை தொடங்கியது
கடலூர் மாவட்டத்தில் 2½ மாதத்துக்கு பிறகு ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடும் முறை நேற்று தொடங்கியது.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 5 முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 8-ந்தேதி (அதாவது நேற்று) முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்று அனுமதி அளித்து, மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் வாடிக்கையாளர்களுக்காக பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கியது.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நேற்று காலை வழக்கம் போல் திறக்கப்பட்டன. இதையொட்டி ஓட்டல்களுக்கு உணவு சாப்பிட வருபவர்கள் தங்கள் கைகளை நன்கு சுத்தமாக கழுவுவதற்கு வசதியாக ஒவ்வொரு ஓட்டல்களின் நுழைவுவாயில் முன்பும் சானிடைசர், சோப்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் மூலம் பொதுமக்கள், கைகளை நன்கு சுத்தமாக கழுவினர்.
அதன் பிறகு ஒவ்வொருவரையும் ஓட்டல் ஊழியர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்தனர். இந்த சோதனை முடிந்த பிறகே பொதுமக்கள், உணவு சாப்பிட ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் வந்த ஒரு சிலருக்கு, ஓட்டல் ஊழியர்களே முக கவசம் வழங்கினர்.
பெரிய ஓட்டல்களில் ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தவில்லை.
மேலும் ஒரு மேஜைக்கும், மற்றொரு மேஜைக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தது. 4 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் 2 பேரும், 6 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் 3 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டது. அதோடு அவ்வப்போது ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிடும் இடம், சமையல் செய்யும் இடம், பார்சல் வழங்கும் இடம், கழிவறை என அனைத்து இடங்களையும் கிருமி நாசினி திரவத்தால் சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக அரசு அறிவித்த நடைமுறைகளை முழுமையாக பின் பற்றி வருகிறோம். ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்துவதில்லை. இரவு 8 மணி வரை ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் வழக்கமாக சாப்பிடும் நேரம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஆகும். அதனால் ஓட்டல்கள் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story