தானேயில் துணிகரம் ரூ.18 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் போலீஸ் வலைவீச்சு


தானேயில் துணிகரம் ரூ.18 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2020 6:04 AM IST (Updated: 10 Jun 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் ரூ.18 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பையை அடுத்த தானே சீல்டைகர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் மர்மஆசாமிகள் சம்பவத்தன்று இரவு நேரத்தில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக எந்திரத்தை உடைக்க முயன்றபோது, அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் எந்திரத்தை பெயர்த்தெடுத்து கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.17 லட்சத்து 96 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காண அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story