நாமக்கல் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு


நாமக்கல் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 10 Jun 2020 3:01 AM GMT (Updated: 10 Jun 2020 3:01 AM GMT)

நாமக்கல் அருகே வளைவில் திரும்ப முயன்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவரது உறவினர் கதிர்வேல் (25). தச்சு தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் இருந்து போடிநாயக்கன்பட்டி நோக்கி வேலைக்கு சென்று கொண்டு இருந்தனர். சுப்பிரமணி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். கதிர்வேல் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியில் சென்றபோது, எதிரே பாலப்பட்டியில் இருந்து கூலிப்பட்டிக்கு செம்மண் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பாலப்பட்டியை சேர்ந்த ராஜரத்தினம் (32) என்பவர் ஒட்டி வந்தார். அங்குள்ள வளைவில் வேகமாக திரும்ப முயன்றபோது லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

அப்போது, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த சுப்பிரமணி, கதிர்வேல் ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் சுப்பிரமணி, கதிர்வேல் ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நேற்று நாமக்கல்-துறையூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story