கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி ராமேசுவரத்தில் அங்கபிரதட்சண போராட்டம்


கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி ராமேசுவரத்தில் அங்கபிரதட்சண போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 5:12 AM GMT (Updated: 2020-06-10T10:42:44+05:30)

கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி ராமேசுவரம் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் அங்கபிரதட்சண போராட்டம் செய்தனர்.

ராமேசுவரம், 

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ராமேசுவரம் கோவிலிலும் கடந்த 78 நாட்களாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அக்னிதீர்த்த கடற்கரை மற்றும் கோவிலின் ரத வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அங்கபிரதட்சணம்

இந்த நிலையில் ராமேசுவரம் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி கோவிலின் மேலவாசல் முன்பு இந்துமக்கள் கட்சியினர் அங்கபிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் உடலில் மஞ்சள் தண்ணீரை ஊற்றி வேப்பிலைகளுடன் கோவில் முன்புள்ள சாலையில் இருந்து வாசல் வரை அங்கபிரதட்சணம் செய்து, வாசல் முன்பு நின்று கோஷம் போட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story