கடலூரில் அனுமதியின்றி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 30 பேர் கைது


கடலூரில் அனுமதியின்றி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 30 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 11:16 AM IST (Updated: 10 Jun 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

கடலூர்,

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு நிபந்தனையின்றி மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதற்கிடையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கார் நிறுத்தம் அருகில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அரிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜன், நகர்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் துரை, மாநிலக்குழு நிர்வாகிகள் மாதவன், குளோப் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுநகர் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து 19 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மற்றொரு தரப்பினர் கடலூர் அண்ணா பாலம் அருகில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அவர்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story