மோட்டார் சைக்கிளில் சென்றபோது டிப்பர் லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்றபோது டிப்பர் லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2020 7:58 AM IST (Updated: 11 Jun 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்கண்டபள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்து பழனி (வயது 43). பேகேபள்ளி வசந்த் நகரை சேர்ந்தவர் செல்வி (50). இவர்கள் 2 பேரும் ஓசூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களில் முத்துபழனிக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். செல்வியின் கணவர் ஆனந்தன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முத்துபழனியும், செல்வியும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் பேகேபள்ளியில் இருந்து ஓசூர் சிப்காட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். வழியில் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துபழனி, செல்வி ஆகிய 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து நடந்தவுடன் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் முத்துபழனி, செல்வி ஆகிய 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story