பட்டணம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.33 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்


பட்டணம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.33 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 11 Jun 2020 4:07 AM GMT (Updated: 11 Jun 2020 4:07 AM GMT)

பட்டணம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.33 கோடி மதிப்பில் திட்டப்பணிகளுக்காக அமைச்சர் சரோஜா அடிக்கல் நாட்டினார்.

ராசிபுரம்,

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிக்காடு பகுதியில் ரூ.35 லட்சத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவது, ரூ.6.70 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைப்பது போன்ற திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

குச்சிக்காட்டில் சமுதாயக்கூடம் கட்டுவது, சாலை அமைப்பது உள்பட பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைக்கவும், புதிதாக ரேஷன்கடை கட்டிடம் கட்டுவது உள்பட மொத்தம் ரூ.87.80 லட்சத்தில் பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் சரோஜா அடிக்கல் நாட்டினார்.

விழாவில் ராசிபுரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளரும், வடுகம் ஊராட்சி மன்ற தலைவருமான பாலன், பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பி.டி.ராஜேந்திரன், குச்சிக்காடு சின்னப்பையன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகேசன், பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவராஜ், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ராதா சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குருக்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டகளூர் கேட்டில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை அமைச்சர் சரோஜா திறந்து வைத்தார். இதில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜூ, ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பாலாமணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சி 14-வது வார்டில் ரூ.6 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி புதிதாக கட்டுவதற்கும், 12-வது வார்டில் ரூ.20 லட்சத்தில் தார்சாலை அமைக்கவும், நெசவாளர் காலனியில் ரூ.19.50 லட்சத்தில் வடிகால் அமைக்கவும் உள்பட ரூ.45.50 லட்சத்தில் பணிகளுக்கு அமைச்சர் சரோஜா அடிக்கல் நாட்டினார்.

இதில் பிள்ளாநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன், ஒப்பந்தக்காரர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகேசன் மற்றும் பேரூர் நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் ராசிபுரத்தில் ரூ.9.90 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டவும் அடிக்கல் நாட்டினார். ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தார்சாலையையும் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை சுகாதார துறையினரிடம் வழங்கினார். இதில் ஆணையாளர் குணசீலன், முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story