தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் : 28 பேர் கைது


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் : 28 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2020 5:22 AM GMT (Updated: 11 Jun 2020 5:22 AM GMT)

விவசாயிகளை பாதிக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ஐ திருத்தம் செய்ய வேண்டும், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் புதிய அவசர சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக கோரிக்கையை வலியுறுத்தி 5 பேர் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்யலாம் என போலீசார் கூறினர்.

அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் நாகராஜ், கீதா, தாண்டவராயன், முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் திண்டிவனத்தில் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் துணை செயலாளர் சுந்தர், மயிலம் ஒன்றிய தலைவர் கமலக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் மேல்மலையனூர் அருகே வளத்தி கூட்டுசாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் எழில்ராஜா தலைமை தாங்கினார். இதில் மொத்தம் 28 பேர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story