வேலூர் மாவட்டத்தில், ஒரு வயது பெண் குழந்தை உள்பட 11 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 159 ஆக உயர்வு
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு வயது பெண் குழந்தை உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 148 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு வயது பெண் குழந்தை உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
வேலூர் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் 38 வயது ஆண். இவர் வேலூர் மண்டிதெருவில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட 10 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5 பேரின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், அவரின் தந்தை (வயது 69), தம்பி (29), மகன் (3) மகள் (1) ஆகிய 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவருடன் பழகிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே, மண்டிதெருவில் உள்ள அரிசி கடை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நேற்று காலை மூடப்பட்டது.
வேலப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த கஸ்பாவை சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அங்கு சிகிச்சைக்காக வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் விருபாட்சிபுரத்தை சேர்ந்த 35 வயது பெண், கணியம்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்த 21 வயது ஆண், வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த 33 வயது ஆண், சேனூரை சேர்ந்த 28 வயது ஆண், காட்பாடி ராஜவீதியை சேர்ந்த 44 வயது ஆண், பாகாயம் வளர்நகரை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேருடன் பழகிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக இன்று 11 பேரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கி பழகியவர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story