புதிதாக இணைபவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் பா.ஜ.க. தலைவர் முருகன் பேட்டி


புதிதாக இணைபவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் பா.ஜ.க. தலைவர் முருகன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2020 5:11 AM IST (Updated: 13 Jun 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்சியில் இணைபவர்களை வரவேற்பதற்கு தயாராக இருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில கட்சியின் தலைவர் வக்கீல் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் அக்கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் கட்சியின் மாநில தலைவர் பெரோஸ்கான் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு, எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, உறுப்பினர் அட்டையும் வழங்கினார். பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்கு, அக்கட்சியினர் கைகளை தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பா.ஜ.க. தயார்

பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அளித்த பேட்டியில், பா.ஜ.க.வில் சமீபத்தில் இணைந்த வி.பி. துரைசாமி, பால் கனகராஜ் ஆகியோர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே இணைந்துள்ளனர். மேலும் யாராவது மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைய வந்தாலும், அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும். முகக்கவசங்கள், ‘மோடி கிட்‘ வழங்கும் பணியை பா.ஜ.க. தொடர்ந்து செய்து வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, செயலாளர் கரு.நாகராஜன், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், தொழிற்சங்க பிரிவு துணை தலைவர் பி.ஆர்.பிரதாப் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்ச்சை விளக்கம்

பா.ஜ.க.வில், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால் நிகழ்ச்சி ஊரடங்கு விதிகளை தவறாமல் பின்பற்றியே நடந்ததாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டதாகவும், சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டதாகவும் பா.ஜ.க. விளக்கம் அளித்துள்ளது.

Next Story