ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் எதிரொலித்த சத்தம்: ஹெலிகாப்டர் விழுந்ததாக பரபரப்பு அதிகாரிகள் விளக்கம்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் எதிரொலித்த பயங்கர சத்தத்தால் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் வானில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்போது லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பின்பு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று பொதுமக்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில் பல இடங்களிலும் இதேபோன்று சத்தம் கேட்டுள்ளது தெரியவந்தது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் வானில் எழுந்த இந்த சத்தம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து 3 மாவட்டத்தை சேர்ந்த போலீசார் இந்த சத்தம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சிறுகம்பையூர் பேயாடிக்கோட்டை அருகில் வசந்தனூர் கண்மாயில் ஹெலிகாப்டர் வெடித்து கீழே விழுந்து எரிந்து கொண்டு இருப்பதாகவும், அதில் பயணம் செய்த 6 வீரர்கள் உடல்கள் சிதறி கிடைப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகாவில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவுடையார்கோவில் தாசில்தார், அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆகியோர் தற்போது மேலவசந்தம் கண்மாயில் புலத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஒரு சிறு பகுதியில் காய்ந்த புற்கள், கருவேலமரம் ஆகியவை எரிந்து கொண்டிருப்பதாகவும், மற்றபடி விமானமோ, அதன் உதிரிபாகங்களோ இல்லை. மேலும் அங்கு விபத்து நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் விபத்து என்பது முற்றிலும் தவறான தகவல்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்கள் அச்சம்
ராமநாநாதபுரம் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதி மற்றும் சிவகங்கை மாவட்ட கிழக்கு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மீமிசல், ஆவுடையார் கோவில் ஆகிய பகுதிகளில் கேட்ட வெடி சத்தம் ஹெலிகாப்டர் விபத்து இல்லை என்று தெரிய வந்துள்ளது. அப்படி என்றால் மக்களை பீதிக்குள்ளாக்கிய அந்த சத்தம் எங்கிருந்து வந்தது? என்ற மர்மம் அகலவில்லை. இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து வருகிறது.
Related Tags :
Next Story