சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வட மாநிலத்தவரை குறிவைக்கும் தனியார் பஸ்கள்

வடமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தனியார் பஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. டிரைவர்களும் காத்து கிடக்கின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார், ஒடிசா, அசாம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு உள்ளனர். தற்போது இவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு ரெயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து இதுவரைக்கும் 33 ரெயில்கள் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வடமாநிலம் சென்றுள்ளனர். அதேபோல் ஏராளமான தொழிலாளர்கள் பஸ்களிலும் சென்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது வட மாநிலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் தனியார் பஸ்களை நாடி வருகின்றனர்.
தொலைதூரத்தில் உள்ள வட மாநிலத்திற்கு தனியார் பஸ்சில் செல்வதற்கு அதிக பணம் செலவாகும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பஸ் செலவை பகிர்ந்து கொள்கின்றனர். தற்போது தனியார் பஸ்சுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பஸ் ஓட்டுனர்கள் இந்த தொழிலாளர்களை குறிவைத்து திருப்பூர் ரெயில் நிலையத்தின் சுற்றுவட்டார பகுதியில் பஸ்களை நிறுத்தி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியின் இருபக்கமும் செல்லும் ரோடுகளில் அதிக அளவிலான பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் டிரைவர்கள் சவாரி கிடைப்பதற்காக ரெயில் நிலையத்தின் அருகே காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ரெயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
Related Tags :
Next Story