அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு


அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு
x
தினத்தந்தி 15 Jun 2020 11:00 PM GMT (Updated: 15 Jun 2020 8:29 PM GMT)

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் திருபுரந்தான், சாத்தம்பாடி, கடம்பூர், தென்கச்சிப்பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களது ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சாலைபாலம், தடுப்பணைகள் உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செய்யப்படும் பணிகளை அதிகாரிகள் துணையுடன் ஆளும் கட்சியினர் மேற்கொள்கின்றனர். இந்த பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளிப்பதில்லை. இதுபோன்று குடிமராமத்து பணிகளில் ஏரி, குளம், வரத்து வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் குழு அமைத்து ஊராட்சி மன்ற ஒப்புதலை பெற்று பணிகளை செய்ய வேண்டும் என்ற சட்ட விதிகளையும் புறக்கணித்து ஆளும் கட்சியினர் ஊராட்சி மன்ற ஒப்புதலை பெறாமலேயே பணிகளை செய்து வருகின்றனர். பஞ்சாயத்துராஜ் சட்ட விதிகளை மீறி ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.

இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரிவித்து, கிராம சபை அங்கீகாரம் பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்திரவிடவேண்டும் என்று கூறியுள்ளனர்.

11 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆளும் கட்சியினர் மீது புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவிக்காமல் பணிகளை மேற்கொள்ளுவது தொடர்ந்தால், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் இணைந்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணாசிலை அருகில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தை காக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

Next Story