பழங்குடியினர் வத்திராயிருப்பு வனப்பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்


பழங்குடியினர் வத்திராயிருப்பு வனப்பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jun 2020 3:30 AM IST (Updated: 17 Jun 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் வனப்பகுதிக்குள் செல்ல தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ராம்நகர், பிளவக்கல் அணை, அத்திக்கோவில், நெடுங்குளம், கான்சாபுரம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று 14 வகையான வனப்பொருட்களை சேகரித்து அவற்றை விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் தீவிரவாதிகள், வேட்டையாடும் நபர்கள் மற்றும் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல்தெரிவித்து வனப்பகுதி பாதுகாப்பு நடவடிக்கையிலும் உதவி வருகின்றனர். எந்த வகையிலும் வனத்துறையினரின் விதிமுறைகளை இவர்கள் மீறியது இல்லை.

ஊரடங்கு காலத்தில் இவர்கள் சேகரிக்கும் வனப்பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வனத்துறையினர் பழங்குடியின மக்களை வனப்பகுதிக்குள் செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் அன்றாட பிழைப்புக்காக நம்பி இருக்கும் வனப்பொருட்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் குடும்பத்தினருடன் பிழைக்க வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பழங்குடியினர் தொடர்ந்து வனப்பகுதிக்கு சென்று வனப்பொருட்களை சேகரிக்க அனுமதிக்குமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டுகிறேன். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள பழங்குடியினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story