கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் திடீர் பரபரப்பு வாகன சோதனையின்போது பெண் போலீஸ் மயங்கி விழுந்தார்


கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் திடீர் பரபரப்பு வாகன சோதனையின்போது பெண் போலீஸ் மயங்கி விழுந்தார்
x
தினத்தந்தி 17 Jun 2020 6:53 AM GMT (Updated: 17 Jun 2020 6:53 AM GMT)

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது பெண் போலீஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சோதனைச்சாவடி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இங்கு போலீசாரின் சோதனைக்கு பின்னரே ஈரோட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு நேற்று ஈரோடு போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். காலை 10 மணி அளவில் பெண் போலீஸ் ஏட்டு தனபாக்கியம் என்பவர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் ஏட்டு தனபாக்கியத்தின் காதில் இருந்தும், மூக்கில் இருந்தும் ரத்தம் கொப்பளித்தது. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உடன் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு அங்கேயே படுக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனால் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடனடியாக அந்த வழியாக வந்த ஒரு கால் டாக்சியில் ஏற்றி அவர் வழக்கமாக மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி ஒருவர் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து 2 சக்கர வாகனத்தில் வந்தார். சோதனைச்சாவடி அருகில் வந்தபோது அவரும் திடீர் என்று வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தார். போலீசார் விரைந்து சென்று அவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீஸ் ரத்தம் கக்கியது, வியாபாரி வலிப்பு நோயால் விழுந்தது என்று அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பேய் நடமாட்டம் இருப்பதாக ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோதனை சாவடியில் நடந்த இந்த சம்பவங்கள் இன்னும் பீதியை கிளப்பியது. ஆனால் பெண் போலீஸ் ஏட்டு தனபாக்கியத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதில் இருந்து இதுபோன்று அவருக்கு திடீரென்று மூக்கில் இருந்தும், காதில் இருந்தும் ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு அவர் மருத்துவம் பார்த்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

Next Story