குடும்ப தகராறில் விபரீதம்: மனைவி விஷம் குடித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை - திருக்கனூர் அருகே சோகம்


குடும்ப தகராறில் விபரீதம்: மனைவி விஷம் குடித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை - திருக்கனூர் அருகே சோகம்
x
தினத்தந்தி 18 Jun 2020 3:30 AM IST (Updated: 18 Jun 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால், ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருக்கனூர், 

திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சபிதா (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலை கணவன் -மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சபிதாவை கனகராஜ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சபிதா, தற்கொலை செய்துகொள்ளும் முடிவில், விஷம் குடித்து வீட்டில் மயங்கி, கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில் விஷம் குடித்த சபிதா இறந்துவிட்டதாக நினைத்து, சோகத்தில் கனகராஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சபிதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து, அவரை காப்பாற்றினர். மனைவி விஷம் குடித்த சோகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மண்ணாடிப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story