குன்றத்தூர் பெண் தாசில்தாருக்கு கொரோனா - ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கலக்கம்
குன்றத்தூர் பெண் தாசில்தாருக்கு கொரோனா உறுதியானதால் அவர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாசில்தாராக காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 47 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சளி மற்றும் தொண்டை வறட்சியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெண் தாசில்தாருக்கு நேற்று காலை கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனடியாக அவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து குன்றத்தூர் தாசில்தார் அலுவலகம் முழுவதும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தாசில்தார் அலுவலகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
அதிகாரிகள் அதிர்ச்சி
நேற்று முன்தினம் குன்றத்தூர், மாங்காடு பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்திலும், கடைகளை அடைப்பது குறித்து குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பெண் தாசில்தார் கலந்துகொண்டார்.
அதன் பிறகுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர், அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் மத்தியிலும், பேரூராட்சி வியாபாரிகள் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தெரியாமல் நேற்று ஏராளமான பொதுமக்கள் தாசில்தார் அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story