நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 69 பேருக்கு கொரோனா - பாதிப்பு 1,323 ஆக உயர்வு


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 69 பேருக்கு கொரோனா - பாதிப்பு 1,323 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Jun 2020 4:45 AM IST (Updated: 19 Jun 2020 11:28 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் புதிதாக 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்து உள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களாலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

நேற்று மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 15 பேர் நெல்லை மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்த ஒருவர், மேலும் அந்த பகுதியை சேர்ந்த 2 பேர், டவுன் பகுதியை சேர்ந்த 8 பேர், மகாராஜநகர் பகுதியை சேர்ந்த 3 பேர், குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர்.

இதுதவிர வெளிநாட்டில் இருந்து வந்திருந்த கூடங்குளத்தை சேர்ந்த ஒருவர், சென்னையில் இருந்து வந்திருந்த இடையன்குளத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் சடையநேரி, அம்பை, அம்பலவாணபுரம், திருவேங்கடநாதபுரம், நாங்குநேரி, வள்ளியூர், நாஞ்சான்குளம், மானூர், விக்கிரமசிங்கபுரம், கருங்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதி முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நேற்றுடன் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்து உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இதுதவிர மருதபுரத்தை சேர்ந்த 3 பேரும், லட்சுமிபுரம், அருணாசலபுரம், கடங்கநேரியை சேர்ந்த தலா 2 பேரும், நெல்லையப்பபுரம், தென்காசி பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

இவர்களுடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கப்பல் மாலுமிக்கு தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 529 ஆக உயர்ந்தது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக கப்பல் மாலுமிகள் பணிக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து வந்த கப்பலில் பணியாற்றி இறங்கிய மாலுமி ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் டூவிபுரம், சுனாமி காலனி, எட்டயபுரம் ரோடு, முள்ளக்காடு, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்த்து கொரோனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story