தூத்துக்குடியில் 2,525 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி சிறப்பு நிதி உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


தூத்துக்குடியில் 2,525 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி சிறப்பு நிதி உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 20 Jun 2020 4:30 AM IST (Updated: 20 Jun 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 2,525 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி சிறப்பு நிதி உதவியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி, 

தமிழக அரசின் கொரோனா சிறப்பு நிதி தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2,525 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடியே 13 லட்சம் சிறப்பு நிதி உதவி வழங்குதல் மற்றும் காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் படிக்கும் 70 மாணவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முககவசங்கள் வழங்குதல், 387 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன்(விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உற்பத்தி மூலதன நிதி உதவி மற்றம் காதுகேளாதோருக்கு பிரத்யேக முககவசம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் அடங்கிய பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணு சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவாரண உதவி

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 89 ஆயிரத்து 733 தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.17 கோடியே 94 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போது கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இ-பாஸ் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா தொற்று நோய் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவலாக மாறாமல் இருக்க முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-பாஸ் பெறாமல் எந்த ஒரு நபரும் மாவட்டத்துக்குள் வராமல் தடுக்க சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு ஆய்வகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மேலும் ஒரு கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story