செஞ்சி அருகே விவசாயி சாவில் திடீர் திருப்பம்: “கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கொன்றது அம்பலம்” - -3 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்


செஞ்சி அருகே விவசாயி சாவில் திடீர் திருப்பம்: “கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கொன்றது அம்பலம்” - -3 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 20 Jun 2020 4:30 AM IST (Updated: 20 Jun 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே விவசாயி தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கொன்றது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்வயலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 32). விவசாயி. கடந்த 17-ந் தேதி இரவு இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக தனது மனைவி சாந்தி (30) யிடம் கூறிவிட்டு கார்த்திகேயன் அங்குள்ள ஏரியில் உள்ள ஒரு மரத்தில் கார்த்திகேயன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அவலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திகேயன் உடலில் காயங்கள் இருந்ததால், அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில, அவரது மனைவி சாந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சாந்திக்கும், திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை காம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் மகன் தங்கமணி(30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதற்கு இடையூறாக இருந்ததால் கார்த்திகேயனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாந்தி, இவரது கள்ளக்காதலன் தங்கமணி, இவரது நண்பர் செம்மியமங்கலத்தை சேர்ந்த சிங்காரம் மகன் துரை என்கிற ராமச்சந்திரன்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தங்கமணி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சாந்தியின் அண்ணன் சசிகுமாரும், நானும் நண்பர்கள். கரும்பு வெட்ட சென்றபோது, கார்த்திகேயனும் எங்களுடன் வருவார். அந்த வகையில் மேல்வயலாமூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்று வந்ததால் எனக்கும், சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம், எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

ஆனால் எங்களது கள்ளக்காதலுக்கு கார்த்திகேயன் இடையூறாக இருந்தார். அவருக்கு தெரிந்து விட்டால் நாம், அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியாது என்றும், அவரை கொலை செய்து விடலாம் என்றும் சாந்தி கூறினார். இது தொடர்பாக நாங்கள் இருவரும் திட்டம், தீட்டினோம். கார்த்திகேயனை கொலை செய்ய எனது நண்பரான துரை என்கிற ராமச்சந்திரனும் உதவுவதாக கூறினார்.

அதன்படி கடந்த 17-ந் தேதி இரவு நானும், துரையும் மது அருந்தினோம். மேலும் மது வாங்கிக்கொண்டு மேல்வயலாமூர் ஏரிக்கு சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி இரவு 10 மணிக்கு கார்த்திகேயனை ஏரிக்கு சாந்தி அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு மது கொடுத்தோம். போதை தலைக்கு ஏறியதும் கார்த்திகேயனை அடித்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்தோம். பின்னர், இந்த கொலையை மறைப்பதற்காக அவரது லுங்கியிலேயே கார்த்திகேயனை தூக்கில் தொங்க விட்டு சென்றோம். கார்த்திகேயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சாந்தியும் நாடகமாடினார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
1 More update

Next Story