தூத்துக்குடியில் நிறுத்தப்பட்ட கப்பலில் மேலும் 3 மாலுமிகளுக்கு கொரோனா - உடன்குடியில் 9 பேருக்கு தொற்று


தூத்துக்குடியில் நிறுத்தப்பட்ட கப்பலில் மேலும் 3 மாலுமிகளுக்கு கொரோனா - உடன்குடியில் 9 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 21 Jun 2020 10:45 PM GMT (Updated: 21 Jun 2020 6:59 PM GMT)

தூத்துக்குடியில் நிறுத்தப்பட்ட கப்பலில் மேலும் 3 மாலுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடன்குடியில் 9 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் அனைத்து கப்பல்களிலும் உள்ள மாலுமிகளுக்கு துறைமுக சுகாதாரத்துறையினர் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் கடந்த 17-ந் தேதி 19 மாலுமிகளுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாலுமி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் 3 பேருக்கு கொரோனா

இதைத்தொடர்ந்து அந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கப்பலில் உள்ள 18 மாலுமிகளுக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 3 மாலுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கப்பலில் இருந்த அந்த 3 மாலுமிகளும் நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாலுமிகள் அனைவரும் தொடர்ந்து கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

உடன்குடியில் 9 பேருக்கு தொற்று

இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அங்கு வசித்த தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வந்தனர். அதன்படி சென்னையில் இருந்து உடன்குடிக்கு வந்த 8 பேருக்கும், வெளிநாட்டில் இருந்து உடன்குடிக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உடன்குடி அருகே பரமன்குறிச்சி அய்யனார் நகரில் 2 பேரும், வள்ளியம்மாள்புரத்தில் ஒருவரும், உடன்குடி-மெஞ்ஞானபுரம் ரோடு பகுதியில் ஒருவரும், உடன்குடி பெரிய தெருவில் 2 ஆண்களும், 2 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். உடன்குடி வைத்தியலிங்கபுரத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

கிருமிநாசினி தெளிப்பு

இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியை தனிமைப்படுத்தி சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story