நிலுவை வழக்குகளை விசாரிக்க நெல்லை கோர்ட்டு செயல்பட தொடங்கியது

நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க நெல்லை கோர்ட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வாக 9 மாவட்டங்களில் நேற்று முதல் நீதிமன்றங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கவச உடை அணிந்து டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்தை கோர்ட்டு வளாகத்தில் அடித்தனர்.
நெல்லை கோர்ட்டு
நேற்று காலை வக்கீல்கள் நெல்லை கோர்ட்டுக்கு வரத்தொடங்கினர். 50 சதவீத ஊழியர்களுடன் கோர்ட்டு செயல்பட்டது. கோர்ட்டுக்கு வந்த வக்கீல்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு சானிடைசர் கொண்டு கைகழுவ அறிவுறுத்தப்பட்டது. வக்கீல்கள் முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர். வக்கீல்கள் வழக்கு ஆவணங்களை நேரடியாக ஊழியர்கள் கையில் கொடுக்காமல், அதற்காக அமைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டனர்.
குற்றவியல் மற்றும் உரிமையியல் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் தினமும் 5 வழக்குகள் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று நெல்லை கோர்ட்டில் 5 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே விசாரணை நடந்தது. அதன்பின்னர் காணொலி காட்சி மூலம் ஜாமீன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. கோர்ட்டில் 3 நுழைவு வாயில்கள் உள்ளன. அதில் மேற்கு, கிழக்கு வாசல்கள் மூடப்பட்டன. மத்திய நுழைவு வாயில் மட்டும் திறந்து இருந்தது.
Related Tags :
Next Story