மராட்டியத்தில் புதிதாக 3,721 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் 113 பேர் பலி


மராட்டியத்தில் புதிதாக 3,721 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் 113 பேர் பலி
x
தினத்தந்தி 23 Jun 2020 5:08 AM IST (Updated: 23 Jun 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 133 பேர் உயிரிழந்தனர். மும்பையில் அதிகம் உயரம் கொண்ட 2 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்து உள்ளது

மும்பை, 

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கடந்த 2 வாரங்களில் மாநிலத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 721 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 796 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் மேலும் 113 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 283 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் 66 பேர் பலி

இதேபோல மும்பையில் புதிதாக 1,098 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 586 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 66 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 737 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பையில் தற்போது 29 ஆயிரத்து 720 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 121 பேர் குணமடைந்து உள்ளனர்.

2 கட்டிடங்களுக்கு சீல்

கொரோனா பாதிப்பு காரணமாக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளான மும்பை புலாபாய் தேசாய் ரோட்டில் உள்ள சாகர் தர்ஷன் கட்டிடம், நேப்பியன் சீ ரோட்டில் உள்ள தக்னீ கட்டிடத்தையும் மும்பை மாநகராட்சி சீல் வைத்து உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்தில் சாகர் தர்ஷன் கட்டிடத்தில் 10 பேருக்கும், தக்னீ கட்டிடத்தில் 22 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் டிரைவர், வீட்டுவேலையாட்கள், காவலாளிகள் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேபோல தானே மாவட்டத்தில் 25 ஆயிரத்து 390 பேரும் (732 பேர் பலி), பால்கர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 621 பேரும் (93 பேர் பலி), ராய்காட் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 632 பேரும் (93 பேர் பலி), புனே மாவட்டத்தில் 16 ஆயிரத்து 474 பேரும் (612 பேர் பலி) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story