ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா 2½ வயது குழந்தை உள்பட 4 பேர் பட்டியலில் இருந்து மாற்றம்


ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா 2½ வயது குழந்தை உள்பட 4 பேர் பட்டியலில் இருந்து மாற்றம்
x
தினத்தந்தி 23 Jun 2020 10:04 AM IST (Updated: 23 Jun 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இருந்த பட்டியலில் இருந்து 2½ வயது குழந்தை உள்பட 4 பேர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ளது. மாவட்ட அளவில் பாதிப்பு பட்டியல் 80 என்ற எண்ணிக்கையையும் கடந்த நிலையில் நேற்று 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் கொடுமுடியை சேர்ந்த 26 வயது வாலிபர். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்கிருந்து சொந்த ஊர் வந்த அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்னொருவர் ஈரோடு மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண். சென்னையில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இவர் அடிக்கடி வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்திருக்கிறார். எனவே இவருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி? என்பதையும், அவர் மூலமாக வேறு பரவல் ஏற்பட்டு இருக்கிறதா? என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

4 பேர் நீக்கம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 85 பேர் கொரோனா பாதிப்பு பட்டியலில் இருந்தனர். இதில் குருவரெட்டியூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த3 பேர் ஈரோடு பட்டியலில் இருந்து மாற்றப்பட்டு சென்னை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபோல் 2½ வயது ஆண் குழந்தையும் பெற்றோருடன் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்று வந்தபின் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஈரோடு பட்டியலில் இருந்து மாற்றப்பட்டது.

இவ்வாறு பட்டியலில் இருந்து 4 பேர் நீக்கப்பட்டதால் நேற்று காலை ஈரோடு மாவட்ட பாதிப்பு பட்டியலில் 81 பேர் இருந்தனர். மேலும் 2 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த எண்ணிக்கை 83 ஆக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்த வாலிபர் பெயரும் ஈரோடு பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய ஈரோடு பட்டியலின் படி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 10 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்கள் தவிர பிற மாவட்ட பட்டியல்களில் இருப்பவர்களும் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story