13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்


13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 Jun 2020 4:38 AM GMT (Updated: 23 Jun 2020 4:38 AM GMT)

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நேற்று காலை திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சேகர், ஜெகநாதன்(ஏ.ஐ.டி.யு.சி.), உன்னிகிருஷ்ணன், ரங்கராஜ்(சி.ஐ.டி.யு.), சிதம்பரசாமி, ரங்கசாமி(எல்.பி.எப்.), சிவசாமி, பெருமாள்(ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி, குணசீலன்(எச்.எம்.எஸ்.), பாண்டியராஜன், சம்பத்(எம்.எல்.எப்.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வேலைநேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கொரோனா பெயரை சொல்லிக்கொண்டு பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல், காப்பீடு, வங்கி, ரெயில்வே, பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்கக்கூடாது.

ஆர்ப்பாட்டம்

ஊரடங்கால் வருமானம் இழந்த கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத குடும்பங்கள் அனைத்துக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வீதம் ரூ.22 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

ஊரடங்கு முடிந்த பின்னரும் தொழிற்சாலைகள் உடனடியாக இயக்கத்துக்கு வராது என்பதால் வேலையிழந்து தவிக்கும் 40 கோடி மக்களை காப்பாற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6 மாதங்களுக்கு தேவைப்படும் அனைத்து உணவு பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி தனிமனித இடைவெளி விட்டு மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கத்தினர், வங்கி ஊழியர் சங்கத்தினர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

Next Story