ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை மதுரையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு


ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை மதுரையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 23 Jun 2020 10:43 AM IST (Updated: 23 Jun 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் ஒரு வாரம், மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மதுரை,

மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பேரை பாதித்துள்ளது.

157 பேருக்கு பாதிப்பு

நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வந்தது. நேற்று முன்தினம் வரை பாதிப்பு 705-ஆக இருந்தது.

இதுவரை இரட்டை இலக்கத்தில் வந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று மூன்று இலக்கம் அடைந்தது. அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மீண்டும் முழு ஊரடங்கு

எனவே நோய் பரவலை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து முழு ஊரடங்கை மீண்டும் மதுரை நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமல்படுத்த நேற்று உத்தரவிட்டது.

இந்த ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் (24-ந் தேதி) அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குறுகலான குடியிருப்பு வசதி

தமிழகத்தில் 30-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை மாநகராட்சி பகுதி மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும், அங்குள்ள பல மண்டலங்களில் வீடுகள் நெருக்கமாக இருந்து சராசரி குடியிருப்பு வசதி குறுகலாக இருப்பதாலும் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.

மேலும் மதுரை மாநகரத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊரக வட்டாரங்களில் தொற்று லேசாக அதிகரித்து வருகிறது. மேலும், மாவட்டங்களுக்குள் நடக்கும் மக்களின் போக்குவரத்தினாலும் தொற்று அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எந்தெந்த இடங்கள்

எனவே தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. அதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிவகை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதுசம்பந்தமாக மண்டல குழுக்கள், மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் ஊரக வட்டாரங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கருத்து கூறினர். இதன் மூலம் கொரோனா பரவும் சங்கிலியை உடைப்பதோடு, தொற்றை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்துவதை மேலாண்மை செய்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் இதன் மூலம் தொற்றை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

7 நாட்களுக்கு...

முதல்-அமைச்சரும் மருத்துவ மற்றும் பொதுசுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, கொரோனா மேலும் பரவாமல் இருப்பதற்காக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி மற்றும் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் ஊரக வட்டாரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது.

இதன் மூலம் நோயாளிகளை தனிமைப்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மேலாண்மை செய்வது ஆகிய பணிகளை இன்னும் திறம்படச் செய்ய வழிவகுக்கும்.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்பு (24-ந் தேதி) தொடங்கி 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு அந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story