திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Jun 2020 5:33 AM GMT (Updated: 23 Jun 2020 5:33 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது அவசர கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள தொலைபேசி வழி மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். செல்போனில் தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.

இதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பல குழுக்களாக அமர்ந்திருந்தனர். அவர்களும் பொதுமக்களின் குறைகளை பதிவு செய்தனர். மேலும் வாட்ஸ் அப் மூலமாக வந்த குறைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் தொலைபேசி வாயிலாக 113 குறைகளும், வாட்ஸ்அப் மூலம் 240 மனுக்களும் பெறப்பட்டது.

Next Story