ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று; கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லையை மிஞ்சிய தூத்துக்குடி


ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று; கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லையை மிஞ்சிய தூத்துக்குடி
x
தினத்தந்தி 24 Jun 2020 4:30 AM IST (Updated: 23 Jun 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லை மாவட்டத்தை தூத்துக்குடி மிஞ்சியது. நேற்று ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்து உள்ளது.

2 போலீஸ்காரர்கள்

திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 37 வயது போலீஸ்காரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாலுகா போலீஸ் நிலையம் மூடப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட போலீஸ்காரர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மேலும் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தில் உள்ள 8 மாத குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சரவணபொய்கை ரோடு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. இதற்கிடையே, திருச்செந்தூர் தாலுகா போலீசில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 41 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதுதவிர தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், முள்ளக்காடு, உடன்குடி, திருச்செந்தூர், ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 193 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லையில் 5 பேருக்கு தொற்று

நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாளையங்கோட்டை பொதிகை நகர் பகுதியில் 3 வயது குழந்தை உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த ஜவுளிக்கடை மூடப்பட்டு, கதவில் அறிவிப்பு ஒட்டப்பட்டது.

இதேபோல் பாளையங்கோட்டை பெருமாள்புரம், திருமால்நகர் பகுதியில் உள்ள 2 அரசு பெண் டாக்டர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று காணப்பட்டது. அவர்கள் உடனடியாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

கிருமி நாசினி தெளிப்பு

மேலும் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் வீடுகள் மற்றும் அந்தந்த தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தெருக்கள் மூடப்பட்டது. அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் ஒரே குடியிருப்பு வளாகத்தில் உள்ள 7 பேருக்கு கடந்த சில நாட்களாக அதிகமான காய்ச்சல் இருந்ததாக தகவல் வெளியானது. இதை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று 5 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 648 ஆக உயர்ந்துள்ளது. இதில் 432 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். 5 பேர் பலியாகி விட்டனர். மீதி 211 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லையை மிஞ்சியதூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஏற்கனவே 261 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று 11 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்தது. இதில் 110 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மீதி 162 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பில் நெல்லை மாவட்டத்தை தூத்துக்குடி மிஞ்சியது. நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 648 ஆகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் 678 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story