கோவில்பட்டி சிறையில் தந்தை-மகன் சாவு: தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


கோவில்பட்டி சிறையில் தந்தை-மகன் சாவு: தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2020 4:15 AM IST (Updated: 24 Jun 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 450 ஆட்டோ டிரைவர்கள், 50 இசை கலைஞர்கள், 600 பொதுமக்கள் என மொத்தம் 1,100 பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

87 சதவீதம் பேர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 650 பேர் வரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் 639 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 87 சதவீதம் பேர் வெளிமாநிலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் வந்தவர்கள். மீதி 13 சதவீதம் பேர் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்களிடம் தொடர்பு வைத்தவர்கள். அவர்கள் அனைவரும் விரைவாக குணமடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்களோ, அந்த அளவிற்கு குணமடையும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. நாளைய தினம் (அதாவது இன்று) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி காட்சி மூலம் பேச உள்ளார். அப்போது அவர் தேவையான முடிவுகளை அறிவிப்பார்.

சிறையில் வியாபாரிகள் சாவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ரூ.60 லட்சம் மதிப்பில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி தந்திருந்தார். தற்போது ரூ.60 லட்சம் மதிப்பில் 2-வது பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. அது 2 நாட்களில் செயல்பட தொடங்கும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான பேருக்கு பரிசோதனை செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டி சிறையில் தந்தை-மகன் இறந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அதுகுறித்து முதல்-அமைச்சர் விசாரிப்பார். தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். அதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது‘ என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் கோபால், முன்னாள் தொகுதி செயலாளர் வடமலைபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பூந்தோட்டம் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கையுறை வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் 3 ஆயிரம் முககவசம் மற்றும் கையுறை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முககவசம், கையுறைகளை வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story