கர்நாடகத்தில் கொரோனா சமுதாய பரவலுக்கு வாய்ப்பு - தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா சமுதாய பரவலாகமாற வாய்ப்பு உள்ளதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
பெங்களூரு,
தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
லட்சக்கணக்கான தொண்டர்கள்
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களே இல்லை. அந்த கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் தலைவர்களே. இருக்கும் சில தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது இல்லை. பா.ஜனதாவுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். எங்கள் தொண்டர்கள் எப்போதும் மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
கொரோனா விஷயத்தில் மாநில அரசை டி.கே.சிவக்குமார் குறை கூறியுள்ளார். அரசியல் நோக்கத்தில் அவர் அவ்வாறு கூறி இருக்கிறார். பா.ஜனதா அரசு என்பதால், கர்நாடக அரசை மத்திய அரசு பாராட்டி இருப்பதாக அவர் சொல்கிறார். இன்னும் பல மாநிலங்களில் பா.ஜனதா அரசு உள்ளது. அந்த மாநிலங்களை மத்திய அரசு பாராட்டி உள்ளதா?.
கொரோனா வைரஸ்
மாநிலங்களவை தேர்தலில் வட கர்நாடகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே முக்கியத்துவத்தை வட கர்நாடகத்திற்கு வழங்க வேண்டும் என்று பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழுவிடம் கேட்போம். கொரோனா வைரஸ் கிராமங்களிலும் பரவுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வந்துள்ளவர்களால் இந்த பரவல் ஏற்படுகிறது.
அதனால் கர்நாடகத்தில் கொரோனா சமுதாய பரவலாக மாற வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாநில அரசு கூறும் வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த வைரஸ் எந்த பாகுபாட்டையும் பார்ப்பது இல்லை. மந்திரி குடும்பத்தில் இருந்து போலீசார், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் தாக்குகிறது. பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம்.
ஊரடங்கு தளர்வு
தார்வாரில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் அங்கு கொரோனா பாதித்த பகுதிகளை சீல் வைக்க தேவை இல்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பெங்களூருவில் கொரோனா பாதித்த நபர் இருக்கும் வீட்டில் இருந்து 100 மீட்டர் தூர பகுதிகளை சீல் வைப்பது சரியான நடவடிக்கை தான்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Related Tags :
Next Story