தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்தோருக்கு உதவிக்கரமாக விளங்கும் மாநகராட்சி பணியாளர்கள்
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா பாதித்தோருக்கு வேண்டிய காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீடு தேடி சென்று மாநகராட்சி கள பணியாளர்கள் தருகிறார்கள்.
சென்னை,
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா பாதித்தோருக்கு வேண்டிய காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீடு தேடி சென்று மாநகராட்சி கள பணியாளர்கள் தருகிறார்கள்.
வீட்டில் தனிமை படுத்தப்பட்டோர்...
சென்னையில் எந்தவித அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கிறார்கள். அதேவேளை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு தனிமையில் உள்ளனர். அதன்படி வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த மாநகராட்சி அதிகாரிகள்சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 3 ஆயிரத்து 500 கள பணியாளர்களை நியமித்து மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, மண்டல வாரியாக அந்தந்த வார்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த மாநகராட்சி கள பணியாளர்கள் சுற்றி வந்து, வீட்டு தனிமையில் இருப்பவர்களிடம் சென்று பேசி அவர்கள் விருப்பப்படும் காய்கறிமளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருகிறார்கள். பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் வசூலித்து கொள்கிறார்கள்.
உதவிக்கு வரும் கள பணியாளர்கள்
சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் ஏராளமான இளைஞர்-இளம்பெண்கள் கள பணியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளிடமும் பேசி விருப்பப்படும் சாக்லெட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி தருகிறார்கள். முதியோருக்கும் தேவையான மாத்திரை-மருந்துகள், வெற்றிலை முதலான பொருட்களையும் அன்போடு வாங்கிவந்து வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
மக்கள் அன்பாக பழகுகிறார்கள்
வளசரவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட தனியார் கல்லூரி வளாகத்தில் 74 கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 ஷிப்டுகளாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள் உள்ள மருத்துவக்குழுவினர், மின்வாரிய ஊழியர் உள்ளிட்ட துறை சார் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த பணிகளை மாநகராட்சி உதவி நல அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில் எந்தவித தடங்கலும் இருக்கக்கூடாது என்ற வகையில் கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவிபுரிய வீடு வீடாக நாடி வரும் இவர்களிடம் பொதுமக்களும் அன்பாக பழகுகிறார்கள்“, என்றனர்.
Related Tags :
Next Story