சென்னை குடிசை பகுதிகளில் 80 சதவீதம் கொரோனா தொற்று குறைந்தது-மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பேட்டி
சென்னையில் குடிசை பகுதிகளில் கொரோனா தொற்று 80 சதவீதம் குறைந்து விட்டதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் குடிசை பகுதிகளில் கொரோனா தொற்று 80 சதவீதம் குறைந்து விட்டதாகவும், வீடு, வீடாக நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனையில் நாள்தோறும் 3,500 நபர்களுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் மூலம் நடத்தப்படும் பரிசோதனையில் தினந்தோறும் 3 ஆயிரத்து 500 பேர் அறிகுறிகளுடன் கண்டறியப்படுகின்றனர். அதில் பரிசோதனை தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உறுதியாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தவிர காய்ச்சல் முகாமில் தினசரி 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
தூய்மை பணியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினசரி ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் பொதுவாக தினசரி 5 ஆயிரத்து 200 டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் தற்போது நிலவிவரும் அசாதாரான சூழ்நிலையில் கடந்த 90 நாட்களாக சென்னையில் 2 ஆயிரம் டன் குறைந்து, சராசரியாக 3 ஆயிரத்து 100 டன் குப்பைகள் மட்டும் சேகரிக்கப்படுகிறது.
தூய்மைப்பணியாளர்களின் போக்குவரத்து வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 95 பஸ்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் நகரத்தின் 49 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
மாநகராட்சி பணியாளர்கள் 345 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர், மாநகராட்சி வருவாய் அலுவலர் உள்பட 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 120 தூய்மை பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 15 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். தூய்மை பணியை பொருத்தவரை 12 மண்டலங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலும், 3 மண்டலங்கள் தனியார் வசமும் உள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் சரியாக போடப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகளில் 80 சதவீதம் தொற்று குறைந்து விட்டது. குடிசைப்பகுதிகளில் வசிக்கும் நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின்படி ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story