வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை: சேலத்தில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடியது


வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை: சேலத்தில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 26 Jun 2020 6:33 AM IST (Updated: 26 Jun 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் புதிய பஸ் நிலையம் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மண்டலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாவட்டங்களுக்குள் மட்டுமே நேற்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமென்றால் ‘இ-பாஸ்’ பெற்றால் மட்டுமே செல்ல முடியும்.

இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இருந்து 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நஷ்டம்

அதே சமயம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர், மேட்டூர், மேச்சேரி, ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் மிகவும் குறைவான அளவிலே பயணிகள் அமர்ந்திருந்தனர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் இருந்து ஆத்தூர், எடப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 324 அரசு பஸ்கள், 70 தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன, என்றனர். இதேபோல் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் ஜங்சன் ரெயில் நிலையம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து பயணம் செய்ததை காணமுடிந்தது.

Next Story