வெளிநபர்கள் வர தடை: விழுப்புரம் மாவட்ட எல்லைகள் ‘சீல்’ அரசு பஸ்கள், மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கின


வெளிநபர்கள் வர தடை: விழுப்புரம் மாவட்ட எல்லைகள் ‘சீல்’ அரசு பஸ்கள், மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கின
x
தினத்தந்தி 26 Jun 2020 1:40 AM GMT (Updated: 26 Jun 2020 1:40 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க விழுப்புரம் மாவட்ட எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு வெளிநபர்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அரசு பஸ்களும், மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கின.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரமாக அமல்படுத்திய போதிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்நோய் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 30-ந் தேதி வரை வாகன போக்குவரத்தில் மண்டல முறையை தற்காலிகமாக ரத்து செய்து அதற்கு பதில் மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும், பஸ் போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் வாகன போக்குவரத்தில் மண்டல முறை ரத்து செய்யப்பட்டு மாவட்டத்திற்குள் மட்டுமே இ-பாஸ் இன்றி பயணம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில் விழுப்புரம் கோட்டத்தில் மொத்தமுள்ள 3,054 பஸ்களில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மண்டல பகுதிகளில் 274 நகர பஸ்களும், 549 புறநகர் பஸ்களும், 11 மலை வழித்தட பஸ்களும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மண்டல பகுதிகளில் 121 நகர பஸ்களும், 102 புறநகர் பஸ்களும் என மொத்தம் 1,057 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

மாவட்டத்திற்குள் பஸ்கள் இயங்கின

இந்நிலையில் நேற்று முதல் மண்டல முறை ரத்து செய்யப்பட்டு மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 120 நகர பஸ்களும், 240 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன.

இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 185 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாவட்டத்திற்குள் மட்டும் 110 பஸ்கள் இயக்கப்பட்டன.

பயணிகள் கூட்டம் குறைவு

இதன் காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சில பஸ்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு பயணிகளே பயணம் செய்ததால் காலியாக சென்றன. இன்னும் சில பஸ்கள், பயணிகள் இன்றி பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதுபோல் ஒன்றிரண்டு தனியார் பஸ்களே இயக்கப்பட்டன.

மாவட்ட எல்லைகள் ‘சீல்’ வைப்பு

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால் அதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்கு பேரிகார்டுகள் மற்றும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளான கெங்கராம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, மணம்பூண்டி, ஆனத்தூர், மடப்பட்டு, பனையபுரம், ஓங்கூர், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாப்பாம்பாடி, ஞானோதயம், மழவந்தாங்கல் கூட்டுசாலை, பட்டானூர் சோதனைச்சாவடி, தாழங்காடு ஆகிய 13 இடங்களில் போலீசார் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இ-பாசுடன் வந்தவர்கள் மட்டும் அனுமதி

அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களையும் பிற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்காமல் மாவட்ட எல்லையோடு திருப்பி அனுப்பினர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரத்தில் திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக இ-பாஸ் அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர். அதுபோல் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த தீவிர கட்டுப்பாடுகளால் மக்கள் கூட்டம் சற்று குறைந்து முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

Next Story