விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2020 7:12 AM IST (Updated: 26 Jun 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகளை நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்றும் பார்வையிட்டார். தொடர்ந்து, விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள கடைகளில் அவர் ஆய்வு செய்தார்.

அப்போது முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் சிலரை எச்சரித்து உடனடியாக முக கவசம் அணிந்துகொண்டு வரும்படி அனுப்பினார். அதோடு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் பொருட்களை வழங்கக்கூடாது என்று கடை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

எச்சரிக்கை

மேலும் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் கைகளை நன்கு சுத்தமாக கழுவுவதற்கு வசதியாக சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டாயம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோடு சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதனை தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள விழுப்புரம் கணபதி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அங்கு செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். 

Next Story