புதுச்சேரி மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்


புதுச்சேரி மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
x
தினத்தந்தி 26 Jun 2020 7:36 AM IST (Updated: 26 Jun 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,500 வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீன்பிடி தடைக் காலம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்ததாக மத்திய அரசு அறிவித்தது.

இதையொட்டி மீனவர்கள் தங்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கான கோப்பு தயார் செய்து கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்று கவர்னர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

கவர்னர் ஒப்புதல்

இந்தநிலையில் கடந்த காலங்களை போலவே இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கும் கடந்த ஆண்டைப் போலவே தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளதாக மீன்வளத்துறை செயலாளர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story