மின்னல் வேகத்தில் பரவும் நோய் தொற்று: மதுரையில் ஒரே நாளில் டாக்டர்கள் உள்பட 204 பேருக்கு கொரோனா


மின்னல் வேகத்தில் பரவும் நோய் தொற்று: மதுரையில் ஒரே நாளில் டாக்டர்கள் உள்பட 204 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Jun 2020 8:51 AM IST (Updated: 26 Jun 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 204 பேர் பாதிக்கப்பட்டனர்.

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மதுரையில் 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 69 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மதுரை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என 37 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் மதுரை நகர் பகுதியில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும், திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அடங்குவர். இதுபோல் 71 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுபோல் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த டாக்டரும், 3 நர்சுகளும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர வெளி மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், இங்கிருந்து வெளியூர் சென்று பின்னர் மீண்டும் மதுரைக்கு வந்த 7 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 204 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

கண்காணிப்பு

இவர்கள் 204 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

1,279 பேர் பாதிப்பு

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,279 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 448 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 820 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் மதுரையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

நேற்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை 1,834 என முதலிடத்திலும், மதுரை 204 என இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

Next Story