கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- எடியூரப்பா அறிவிப்பு


கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 11:45 PM GMT (Updated: 26 Jun 2020 7:39 PM GMT)

பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்றும், கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பெங்களூரு நகர அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,  

கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 82 பேர் இந்நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளது. மாநில தலைநகரான பெங்களூருவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் பெங்களூரு நகரை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:- பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை 1,207 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதிகளுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார். அனைத்து தொகுதியிலும் சளி மாதிரியை சேகரிக்க தேவையான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். கொரோனாவால் மரணம் அடைகிறவர்களின் உடலை மயானங்களுக்கு கொண்டு செல்ல பிரத்யேகமான ஆம்புலன்ஸ் வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த நகருக்கு வெளியே உள்ள பெரிய திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை அரசு தன்வசப்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆயுர்வேத மருந்துகளை வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்துகிறது.

கொரோனாவை ஒழிக்க முன்களத்தில் நின்று போராடுகிறவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். பெங்களூருவில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனா தடுப்பு பணிகளுடன் பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பெங்களூருவில் கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதிகளுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா அதிகரித்து வருவது குறித்தும், அதை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க முதல்-மந்திரி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பெங்களூருவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அவர்கள் அரசுக்கு முக்கியமான ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூருவில் பாதிப்பு குறைவாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளோம்.

அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூறினர். எம்.எல்.ஏ.க்கள், தங்களின் எல்லைக்குள் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அதுபற்றிய தகவல்களை என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கூறியுள்ளோம்.

பெங்களூருவில் தினமும் சுமார் 4 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்க உத்தரவிடப்படும். படுக்கைகள் ஒதுக்கீடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி துஷார் கிரிநாத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை பரிசோதனை மூலம் கொரோனா உறுதியாகும் நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் சேர அதிகபட்சமாக 48 மணி நேரம் ஆவதாக சொல்லப்படுகிறது.

அதனால், தனியார் மருத்துவமனைகள் நடத்தும் பரிசோதனையில் கொரோனா உறுதியானால், அதுகுறித்து அந்த மருத்துவமனைகள் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி 8 மணி நேரத்திற்குள் அவர்கள் ஆஸ்பத்திரிக்கோ அல்லது கண்காணிப்பு மையங்களுக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள். விக்டோரியா ஆஸ்பத்திரியில் இன்னும் 120 படுக்கைகள் காலியாக உள்ளன.

அடுத்த ஒரு மாதத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் கொரோனா சிகிச்சைக்கு புதிதாக 7,300 படுக்கைகளை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேவையை விட 20 சதவீத படுக்கைகளை தயாராக வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

எனவே பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. கொரோனாவுடன் நாம் வாழ வேண்டும். கொரோனா பாதிப்பு வந்தவுடன் அவர்களை எதிரிகளை போல் பார்க்க வேண்டாம். அவ்வாறு பார்ப்பது தவறு. அது ஒரு நோய். நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது. பெங்களூருவில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை.

கொரோனா தடுப்பு பணிகளுடன் பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ந்து செயல்படும். பாதிப்பு எங்கு அதிகமாக உள்ளதோ அந்த பகுதிகள் மட்டும் சீல் வைக்கப்படும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தலா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்படும் பகுதிகளில் உணவு பொருட்கள், மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர், வாழ்க்கை ஆகிய இரண்டும் மிக முக்கியம். உயிரையும் காக்க வேண்டும், வாழ்க்கையையும் நடத்த வேண்டும். இதை பொதுமக்கள் மனதில் நிறுத்த வேண்டும். ஊடகங்கள் நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும். அரசுக்கு இருப்பது போல், ஊடகங்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும், ஊரடங்கு தேவை இல்லை என்று ஆலோசனை தெரிவித்தனர்.

கன்டீரவா விளையாட்டு மைதானம், சர்வதேச கண்காட்சி மையம், திருமண மண்டபங்களில் கொரோனா கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் இருந்து 8 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று தனியார் மருத்துவமனைகள் கூற முடியாது.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத், மற்றும் மேயர் கவுதம்குமார், பெங்களூரு நகரை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story