சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம்: சேலம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு


சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம்: சேலம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 12:57 AM GMT (Updated: 27 Jun 2020 12:57 AM GMT)

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்டத்தில் நேற்று 25 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

சேலம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த கொடூர செயலுக்கு நீதி கேட்டும், பலியானோர் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், செல்போன் கடைகள் என சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சேலம் செவ்வாய்பேட்டை, கடைவீதி, முதல் மற்றும் 2- வது அக்ரஹாரம், பால் மார்க்கெட், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். ஆனால் ஒரு சில கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சேலம் சில்லறை வணிகர் சங்கங்கள், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் வணிகர் சங்கம், தாவர எண்ணெய் வணிகர் சங்கம், கடைவீதி வியாபாரிகள் சங்கம் மற்றும் செல்போன் வணிகர் சங்கம் என 50-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டன.

இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் 2 பேர் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர செயலுக்கு நீதி கேட்டும், சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தந்தை, மகன் இறப்புக்கு காரணமான சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

தீபம் ஏற்றி....

மேலும் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாநில, மண்டல, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் வருகிற 30-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங் களுக்கு சென்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக புகார் மனு அளித்து போலீசாருக்கும், வணிகர்களுக்குமான உறவை மேம்படுத்த அறப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு வணிகர்களின் இல்லங்களில் தீபம் ஏற்றி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள வீரபாண்டியார் நகர் பகுதியில் அனைத்து செல்போன் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் வணிகர் சங்கங் களின் கடையடைப்புக்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருந்ததால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் காலை 10 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story