குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி


குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 Jun 2020 10:38 AM IST (Updated: 27 Jun 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.14¾ லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.

வேலூர்,

குடியாத்தம் தாலுகா கலர்பாளையம் கிராமம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 56), தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளி. இவர், நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேலை வாங்கி தரவில்லை

நான் தீப்பெட்டி தயாரிக்கும் வேலை செய்து வருகிறேன். எனது உறவினரின் மகன் ஒரு அரசியல் கட்சியில் பிரமுகராக உள்ளார். அவர் 2015-ம் ஆண்டு என்னிடம், தனக்கு பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை நன்கு தெரியும். தற்போது மின்சாரத்துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, பணம் கொடுக்கும் நபர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப ஓராண்டுக்குள் வேலை வாங்கி தருவதாகத் தெரிவித்தார்.

இதை, உண்மை என்று நம்பிய எனது உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் பணம் வாங்கி பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்தை அந்த நபரிடம் கொடுத்தேன். ஓராண்டு முடிந்த பிறகு அவர் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் என்னிடம் பணம் கொடுத்தவர்கள் உடனடியாக வேலை வாங்கி தர வேண்டும், இல்லையெனில் கொடுத்த பணத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

கொலை மிரட்டல்

அதைத்தொடர்ந்து நான் நேரடியாக அந்த நபரிடன் சென்று இதுகுறித்து முறையிட்டேன். அவர் சில நாட்களில் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் கொடுத்த சிலருக்கு என்னுடைய சொந்த பணத்தைக் கொடுத்தேன். விரைவில் பணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தேன்.

இந்த நிலையில் ஊரடங்கால் தலைமறைவான நபர் கடந்தசில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். அவரிடம் சென்று கொடுத்த பணம் ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அதற்கு அவர், பணத்தைத் திருப்பி தர முடியாது எனக் கூறியதுடன், இனிமேல் இங்குப் பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்தது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Next Story