செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; 248 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; 248 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 12:20 AM GMT (Updated: 28 Jun 2020 12:20 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் நேற்று 248 பேர் பாதிக்கப்பட்டனர். இளம்பெண் உள்பட 7 பேர் பலியானார்கள்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் நேற்று 248 பேர் பாதிக்கப்பட்டனர். இளம்பெண் உள்பட 7 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 57 வயது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் காந்தி தெருவை சேர்ந்த 30 வயது வாலிபர், மல்ரோசபுரம் மலைமேடு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, பொத்தேரி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர், கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், பேரமனூர் ராஜலட்சுமி என்கிளேவ் பகுதியில் வசிக்கும் 27 வயது இளம்பெண், கூடலூர் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த 33 வயது வாலிபர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 248 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,911 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,589 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 65 வயது, 64 வயது மூதாட்டிகள், 58 வயது பெண், 58 வயது ஆண், 55 வயது ஆண், 40 வயது ஆண், 30 வயது இளம்பெண் என ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஊராட்சியில் உள்ள காட்டுபாக்கம் பகுதியை சேர்ந்த 43 வயது பெண், 18 வயது இளம்பெண், 23 வயது வாலிபர், 65 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 98 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 ஆனது. இவர்களில் 755 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 910 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 36 வயது டிராக்டர் டிரைவர், கன்னிகைபேர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 29 வயது இளம்பெண், இவரது மளிகை கடையில் பணியாற்றும் 23 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3,420 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2,031 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளனர்.


Next Story