முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது அ.தி.மு.க. குற்றச்சாட்டு


முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jun 2020 3:07 AM GMT (Updated: 28 Jun 2020 3:07 AM GMT)

முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்திற்கான முழு பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வேண்டியது அதன்அரசியல் அமைப்பு கடமை ஆகும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்து பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை கெடுத்து தனது கடமையில் இருந்து அரசு தவறி இருக்கிறது. இப்படிப்பட்ட அரசு புதுச்சேரிக்கு தேவைதானா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதமே மத்திய அரசு புதுச்சேரிக்குரிய நிதி உதவியையும் மத்திய திட்டங்களுக்கான நிதியையும் அறிவித்துவிட்டது. அடுத்த ஒரு மாதத்தில் வரவு - செலவு கணக்கை மதிப்பிட்டு மார்ச் 20-ந் தேதியே மத்திய அரசின் ஒப்புதலோடு சட்டமன்றத்தில் முழு பட்ஜெட்டை சமர்ப்பித்து இருக்கலாம். ஆனால் பொறுப்பற்றத்தனமாக இந்த வாய்ப்பை அரசு நழுவ விட்டு விட்டது.

பொருளாதார சீரழிவு

மார்ச் மாதத்தில் சமர்ப்பித்திருந்தால் பட்ஜெட்டின் அளவு ரூ.9,500 கோடியாக இருந்திருக்கலாம். அப்போது கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் அரசின் சொந்த வருவாய், கடன் வாங்கும் அளவு, செலவினம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக கணித்து இருக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டு புதுவையின் பொருளாதாரத்தை சீரழித்ததற்கு முதல்-அமைச்சர் தான் காரணம்.

முதல்-அமைச்சருக்கு மாநில தலைவிதியை நிர்ணயிக்கும் திட்டக்குழு கூட்டத்தை கூட்ட நேரம் இல்லையா அல்லது கவர்னரை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டவில்லையா? மாநில திட்டக்குழுவின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படலாம்.

அக்கறை இல்லை

திட்டக்குழுவை கூட்டி பட்ஜெட் வேலைகளை நேரத்தோடு முடிவு செய்யாமல் கடைசி நேரத்தில் மத்திய அரசுக்கு அனுப்புவது இந்த அரசுக்கு மாநிலத்தின் மீதும் மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் அக்கறை இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. அவசர கதியில் ஒரு பட்ஜெட்டை சமர்ப்பித்து உரிய விவாதம் இல்லாமல் சட்டமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தால் அந்த பட்ஜெட்டால் யாருக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story