கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி


கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2020 8:45 AM IST (Updated: 28 Jun 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிப்பதில்லை. எனது அலுவலக ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் 2 நாட்கள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறி உள்ளேன்.

பேரிடர் மேலாண்மை குழுவின் செயற்குழு கூட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தோம். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் படுக்கை வசதியை உருவாக்க கூறி உள்ளோம். கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3-வது ‘ஷிப்ட்’ இயங்குவதில்லை. அங்கு 3-வது ‘ஷிப்ட்’ என செயல்பட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஆதரவை கேட்டு உள்ளோம்.

கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களை கண்காணிக்க தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா கேர் சென்டர் உருவாக்கியுள்ளோம். போதிய உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக 40 டாக்டர்கள், 60 நர்சுகள் என 200 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதிகாரம் இல்லை

நகராட்சிகள் அதிக அபராதம் விதிப்பது தொடர்பாக புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை அழைத்து பேச உள்ளேன். மீனவர்கள் போராட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தான் காரணம். மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கோப்புக்கு நாங்கள் ஒப்புதல் அளித்தபின் கவர்னர் தான் ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி கவர்னர் அரசின் செயல்பாடுகளில் நேரடியாக தலையிட அதிகாரம் கிடையாது.

அதேபோல் அவரே தன்னிச்சையாக மாற்ற உத்தரவு போடவும் அதிகாரமில்லை. ஆனால் இதையெல்லாம் மீறி செயல்படுகிறார். இதுதொடர்பாக நீதிமன்றம் மூலம் மேல் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம். அவர் மாநில அரசுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக செயல்படுகிறார். அவருக்கு துணை போனால் அதிகாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்து கவர்னர் மக்கள் விரோதமாக செயல்பட்டால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஊரடங்கில் அடுத்து என்ன?

புதுவை மாநில பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பேசினேன். அவர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இன்னும் ஓரிரு நாளில் ஒப்புதல் கிடைத்துவிடும். இதற்கிடையே பட்ஜெட் தொடர்பாக ஒரு சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். பட்ஜெட் தாமதமாவதற்கு புதுவை அரசு காரணம் அல்ல.

ஊரடங்கு தொடர்பாக வருகிற 30-ந் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல் நமக்கு கிடைக்கும். அதன்பின் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்றி நாங்களும் என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவல்துறையின் அராஜகம்

மேலும் நாராயணசாமி கூறுகையில், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து இறந்து போனது துரதிர்ஷ்டமானது. காவல்துறை மனித உயிர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். அதைவிடுத்து சாதாரண பிரச்சினைக்காக இதுபோல் துன்புறுத்தி இருப்பது காவல்துறையின் அராஜகம். சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Next Story