பல்லடத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடிய பஸ் நிலையம்


பல்லடத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 28 Jun 2020 9:23 AM IST (Updated: 28 Jun 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் இருந்து கோவை, ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயங்காததால் பயணிகள் கூட்டமின்றி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

பல்லடம்,

பல்லடம் பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் பஸ்கள் வந்து சென்ற வண்ணம் இருக்கும். கோவை, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். எப்போதும் மக்கள் நடமாட்டமும் இருக்கும்.

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கால் பஸ் நிலையம் முதன் முதலாக வெறிச்சோடியது. பின்னர் அங்கு காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மண்டல அளவிலான பஸ்கள் இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்ததால், ஓரளவு பஸ்கள் இயக்கப்பட்டு மக்கள் கூட்டம் இருந்து வந்தது.

குறைந்த பஸ்கள்

தற்போது மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவலையடுத்து மாவட்ட அளவிலான பஸ்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல்லடத்தில் இருந்து மிக குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அப்படியும் சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியது இருப்பதால் மக்கள் பஸ் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

பல்லடம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் மொத்தம் 72 பஸ்கள் உள்ளன. இதில் 54 பஸ்கள் கோவை, திருப்பூர், உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி, காங்கேயத்திற்கும் மற்றும் பல்வேறு கிராமத்திற்கு 18 நகர பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் 11 நகர பஸ்களும், 2 பஸ்கள் திருப்பூர், உடுமலைக்கும் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் 4 திருப்பூர், உடுமலையும், பல்லடத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் அவதி

பல்லடத்தில் இருந்து தாராபுரம், காங்கேயம், அவினாசி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்த ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் பல்லடத்தில் இருந்து திருப்பூர் சென்று அங்கு இருந்து தான் மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால் பல்லடம் நகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா தொற்று பயம் காரணமாக பஸ் பயணம் மேற்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

தற்போது இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் நிரம்ப சில மணி நேரம் ஆகிறது. மற்ற ஊர்களுக்கு செல்ல பயணிகளோ இல்லை. அதனால் அந்த ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து மக்கள் கோரிக்கை விடுத்தால் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

Next Story