வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2020 4:13 AM GMT (Updated: 28 Jun 2020 4:13 AM GMT)

வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் ஆரம்ப கட்ட அறிகுறிகள், மரணத்திற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சிகிச்சை அளித்து மீட்கும் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்ச பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 484 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியத்தில் கூட 8 லட்சமும், டெல்லியில் 4 லட்சம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

மரணம்

தமிழகத்தில் தினமும் 34 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் சென்னையில் மட்டும் 10 ஆயிரமும், மதுரையில் 1,500 பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனை செய்வது மிகவும் கடினமானது. 89 மையங்களில் உள்ள லேப் டெக்னீசியன்கள் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மரணம் என்பது 1 சதவீதம் தான் இருக்கிறது. ஆனால் பெல்ஜியம், ஸ்பெயினில் 14 சதவீதம் அளவுக்கு மரணம் ஏற்படுகிறது. இன்று கூட 68 பேர் இறந்துள்ளதாக அறிவித்து இருக்கிறோம். இதில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் வெறும் 8 பேர் தான். மீதமுள்ள 60 பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கொரோனா தொற்றும் இருந்தது.

மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது என்பது அனைவரின் கவலையாக உள்ளது. இங்கு பரிசோதனைகள் அதிகரித்து இருப்பதால் தான் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. மதுரையில் இதுவரை 563 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

படுக்கை வசதிகள்

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 150 படுக்கைகளில் வென்டிலேட்டர்கள் உள்ளன. தாலுகா அளவில் 1,800 படுக்கை வசதிகளும், கேர் சென்டர்களில் 2,400 படுக்கை வசதிகளும் உள்ளன. மதுரையில் தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டு இருக்கிறார்கள். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பிற்கு காரணம், வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் தான் பரவி உள்ளது.

நீட்டிக்கப்படுமா?

மதுரையில் சமூக பரவல் ஏற்பட வில்லை. மதுரையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். ஊரடங்கு மட்டும் கொரோனா பரவுதல் பிரச்சினைக்கு தீர்வல்ல. மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவத்துறை மற்றும் போலீசார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிக்க அவர்கள் தற்காப்பு உடை அணிந்து இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மூலம் தான் கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் போலீசார் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளனர். எனவே அவர்களுக்கு அரசு சார்பில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story