திருவண்ணாமலையில் பூ வியாபாரிகள் திடீர் தர்ணா போராட்டம்


திருவண்ணாமலையில் பூ வியாபாரிகள் திடீர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2020 5:35 AM GMT (Updated: 28 Jun 2020 5:35 AM GMT)

திருவண்ணாமலையில் பூ வியாபாரிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலையில் உள்ள ஜோதி பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திநகரில் உள்ள மைதானத்தில் பூ மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் போலீசார் அங்கு கடைகளை அமைக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. பூ வியாபாரிகள் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. இதனால் கொரோனா பரவும் சூழல் உள்ளது. எனவே தான் கடைகளை அமைக்க விடாமல் தடுப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மைதானம் அருகே சாலையோரமும் கடைகளை அமைக்க போலீசார் கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

வியாபாரம் பாதித்ததால் கடைகளை அங்கு நடத்த அனுமதிக்கக்கோரி பூ வியாபாரிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கடைகளை திறக்க அனுமதி கேட்டு திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 30-ந் தேதி வரை பொறுமையாக இருங்கள். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Next Story