வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்ட தஞ்சை புதிய பஸ் நிலையம்


வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்ட தஞ்சை புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 29 Jun 2020 1:33 AM GMT (Updated: 29 Jun 2020 1:33 AM GMT)

வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் இன்றி தஞ்சை புதிய பஸ் நிலையம் காணப்பட்டது. மேலும் இந்த பஸ் நிலையத்தில் பெண்கள் தனியாக அமர 2 இடங்களில் இரும்பு கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சையில் 1995-ம் ஆண்டு 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது மேம்பாலம், தோரண வாயில்கள், மணி மண்டபம் உள்ளிட்டவை கட்டப்பட்டன. மேலும் தஞ்சை புதிய பஸ் நிலையமும் கட்டப்பட்டது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் கூட்டம் இல்லை

கடந்த 19-ந்தேதிக்கு முன்பு வரை மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 230 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது வருகிற 30-ந்தேதி வரை மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ்கள் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் பஸ்கள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, செங்கிப்பட்டி ஆகிய இடங்களுக்கு மட்டும் தற்போது 40 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பஸ்கள் மட்டும் காத்திருந்தன. பஸ்சில் ஏறுவதற்கு முன்பு பயணிகளின் கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டன.

இரும்பு கூண்டுகள் அமைப்பு

கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது முதல் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாகத்தான் காணப்பட்டு வருகின்றன. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக நீளமாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஆண்கள், பெண்கள் அமர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் பெண்கள் மட்டும் தனியாக அமரும் வகையில் மதுரை பஸ்கள் நிற்கும் மார்க்கத்திலும், கும்பகோணம் பஸ்கள் நிற்கும் மார்க்கத்திலும் பெண் பயணிகள் தனியாக அமரும் வகையில் இரும்புக்கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கூண்டுக்குள் 24 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து செல்லும் வகையில் இந்த கூண்டுகளை மாநகராட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story