தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்


தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 29 Jun 2020 7:49 AM IST (Updated: 29 Jun 2020 7:49 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை சாலையோரத்தில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் இந்த யானை கூட்டங்களில் இருந்து பிரிந்து சென்ற காட்டு யானைகள் விவசாயிகளை தாக்கி வருகின்றன. இந்த யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு காட்டு யானை நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இந்த யானை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி அஞ்செட்டி சாலையில் சுற்றித்திரிகிறது. சாலையோரத்தில் சர்வ சாதாரணமாக நிற்கும் இந்த காட்டுயானையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

நேற்று முன்தினம் மாலை அந்த யானை அஞ்செட்டி சாலையில் நீண்ட நேரம் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் நின்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகள் சென்றனர். வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story