பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா எதிரொலி: திருப்பூர் போலீஸ் குடியிருப்பில் 241 பேருக்கு மருத்துவ பரிசோதனை


பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா எதிரொலி: திருப்பூர் போலீஸ் குடியிருப்பில் 241 பேருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 29 Jun 2020 4:11 AM GMT (Updated: 29 Jun 2020 4:11 AM GMT)

சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் திருப்பூர் போலீஸ் குடியிருப்பில் உள்ள 241 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. கடந்த ஒரு வாரமாக திருப்பூரில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் வெளி ஊர்களில் இருந்து திருப்பூருக்கு வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருக்கிறவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் 241 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

241 பேருக்கு பரிசோதனை

இது குறித்து மாநகராட்சி நகர் நல அதிகாரி பூபதி கூறியதாவது:-

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பெண் போலீஸ், விடுமுறையில் தனது குடும்பத்துடன் இருக்க திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் ஏராளமான போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் சந்தேகத்தின் பேரில் நேற்று 241 போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளோம். இதற்கான முடிவுகள் விரைவில் வரும். இதில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்கள் மேல்சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story