அரிவாளால் வெட்டி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை


அரிவாளால் வெட்டி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2020 10:50 AM IST (Updated: 29 Jun 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அருகே உள்ள புதுபெருங்களத்தூர், விவேக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெகன்நாதம் (வயது 75). இவருடைய மனைவி சுலக்சனா (62). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஜெகன்நாதம், தனது மனைவியுடன் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஜெகன்நாதம், வீட்டில் இருந்தபடியே ஜெனரேட்டர் மெக்கானிக் வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஜெகன்நாதம் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

மனைவியை கொன்று தற்கொலை

இந்தநிலையில் ஜெகன்நாதம், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக புதிதாக அரிவாள் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு அவர், தனது மனைவி சுலக்சனாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். பின்னர் ஜெகன்நாதம், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்துக்கு சென்று அங்கிருந்த கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து நேற்று காலை தகவலறிந்ததும் சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story